Varalakshmi fasting Varalakshmi worship and benefits
வரலட்சுமி விரதம் 16-08-2024
வரலட்சுமி விரதம் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த வரலட்சுமி விரதமானது சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு ஆகும்.
வரலட்சுமி விரதம் வரலாறு:
வரலட்சுமி விரத மகிமையை உணர்த்தும் விதமாக புராணக்கதைகள் சில உண்டு.
சாப விமோசனம் பெற்ற சித்ரநேமி:
ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த சித்ரநேமி என்ற தேவதை பார்வதி தேவியின் சாபத்திற்கு ஆளானார். அப்சரஸ் பெண்கள் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்ததை கண்டு, மிகுந்த பக்தியுடன் தானும் அந்த விரதத்தை அனுஷ்டித்து சாப விமோசனம் அடைந்தார்.
செல்வம் மீண்ட கதை:
முற்காலத்தில் சுசந்திரா என்பவள் சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்தாள். அவளிடம் மிகுந்த செல்வம் இருந்தது. இதனால் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் மகாலட்சுமியை அவமதித்தாள்.
தன் தவறான பழக்கங்களால் அவளுடைய அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, பெரியவர்களிடம் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து அதை கடைப்பிடித்தாள். இதனால் மிகவும் மகிழ்ந்த மகாலட்சுமி அன்னை சாருமதிக்கு சகல செல்வங்களும் அருளினார்.
தன் மகள் சாருமதியைப் பார்த்து சுசந்திராவும் அந்த அற்புத வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை:
அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்து தென் கிழக்கு மூலையில் சிறு மேடை அமைக்க வேண்டும். அதில் ஒரு வாழையிலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசி பரப்பி, ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிரப்பி (புனித நீர் இல்லாவிட்டால் தூய நீரை வைக்கலாம்), மாவிலையுடன் தேங்காயை, அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்பி கலசத்திற்கு மஞ்சள் ஆடை அணிவித்து தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும்.
அம்மன் முன்பு ஐந்து வகையான ஆரத்தி தட்டுகள், தேங்காய் , பழம், மலர்கள், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, பொன் வைத்து பூஜை செய்ய வேண்டும். லட்சுமி தேவியின் அம்சமான அந்த கலசத்தை அர்ச்சனை செய்து லட்சுமி தேவிக்கு பிடித்த நிவேதனங்களைப் படைத்து, நோன்பு சரடு கையில் கட்டி வழிபட வேண்டும்.
இந்த பூஜையை மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், நாம் செய்யக்கூடிய பூஜை நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் நமக்கு தெரிந்த மகாலட்சுமி மந்திரங்கள், அஷ்டோத்திரம் சொல்லியும் 108 போற்றிகள் சொல்லியும் வழிபடலாம்.
பூஜைக்கு பின்னர் வயதான சுமங்கலிப் பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வணங்கி விரதத்தை நிறைவு செய்யலாம்.
வரலட்சுமி விரதம் யார் கடைப்பிடிக்கலாம்?
முக்கியமாக பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்கவும் வீட்டில் சௌபாக்கியம் பெருகவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த விரதத்தைக் கன்னிப் பெண்களும் மேற்கொண்டு மஞ்சள் சரட்டைக் கையில் கட்டிக் கொள்ளலாம்.
மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி காட்டி, பின்னர் கலசத்தை பிரித்து அரிசி வைத்திருக்கும் பானையில் கலந்து விடலாம்.
வரலட்சுமி விரத பலன்கள்:
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், சிறந்த கல்வி, நல்ல குடும்பம், குழந்தைப்பேறு, மாங்கல்ய பலம், புகழ், முற்பிறவி பாவம் நீங்குதல் என பல்வேறு நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
செல்வம் வளரும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் மேற்கொள்வதால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்.