திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
குன்று தோறும் குடிகொண்ட முருகப்பெருமான் உலகில் வேறெங்கும் இல்லாதபடி லிங்கவடிவில் அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான். 27 நட்சத்திரங்களுக்கும் 12 இராசிகளுக்குமான ஒரே பரிகாரத்தலமாக விளங்கும் இத்தல முருகனை கிருத்திகை அன்று தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் செய்யாற்றங்கரையில் அமைந்துள்ள நட்சத்திரகிரி என்று வழங்கப்படும் அழகிய சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த சுயம்பு சுப்பிரமணியர் திருத்தலம். முருகப்பெருமானின் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இத்திருத்தலம் பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.
அருள்மிகு வில்வாரணி சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோவில் பெயர்க்காரணம்
பொதுவாக சிவாலயங்களில் தான் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பார். ஆனால் யாமறிந்த வரை உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் முருகப்பெருமான் சுயம்புவாக தோன்றி அருள் பொழியும் ஒரே திருத்தலம் இந்த வில்வாரணி சுப்பிரமணியர் திருக்கோயிலில் தான். எனவேதான் இத்தல இறைவன் சுயம்பு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் வேதகாலத்தில் வில்வ வனமாக இருந்ததால் இன்றும் இப்பகுதி வில்வாரணி என்று வழங்கப்படுகிறது. 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரத்தலம் என்பதால் நட்சத்திர கிரி என்றும் வழங்கப்படுகிறது.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோவில் வரலாறு
முருகப்பெருமானின் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய வரலாறு:
முன்பு ஒரு சமயம் வேல் வித்தையில் வித்தகரான முருகப்பெருமான், வேல் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்த கொண்டிருந்தபோது அவர் வீசிய வேல் பருவதமலை மேல் பாய்ந்தது. அப்போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளின் மேல் தவறுதலாக பட்டு அவர்களின் தலைகளைக் கொய்தது.
பெருக்கெடுத்த உதிரம் அங்கு பாய்ந்து கொண்டிருந்த நதியில் கலந்து செந்நிற ஆறாக ஓடியது. எனவே அந்த ஆறு சிவப்பு நதி என்ற பொருளில் ‘செய்யாறு’ எனும் பெயர் பெற்றது. அறியாமல் நிகழ்ந்தாலும் தவத்தில் இருந்த ரிஷிகளின் சிரம் கொய்ததால் முருகப்பெருமானை பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.
எனவே குமரக்கடவுள் அன்னை பார்வதிதேவியின் ஆலோசனைப்படி செய்யாற்றின் வடகரையில், வில்வாரணியில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரை பிரதிஷ்டை செய்தும், இடக்கரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் ஏழு இடங்களில் கைலாசநாதரை பிரதிஷ்டை செய்தும், ஒரு மண்டலம் பூஜித்துத் தன் பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார்.
முருகன் சுயம்பு லிங்கமான வரலாறு
முற்காலத்தில் இரண்டு சிவாச்சாரியார்கள் ஆடிக்கிருத்திகை அன்று முருகப்பெருமான் வழிபட்ட இந்த செய்யாற்றங் கரை 14 சிவாலயங்களையும் புரவியில்(குதிரையில்) பயணித்து ஒரேநாளில் தரிசனம் செய்து, இறுதியாக திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருமுறை ஆடிக்கிருத்திகைக்கு இருவருக்கும் திருத்தணிக்கு செல்ல இயலாமல் தடங்கல் நேர்ந்தது. அதனால் இருவரும் மிகவும் மனம் வருந்தினர். வழியில் வில்வ வனத்தில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது இருவரும் கண்ணயர்ந்து தூங்கிவிட்டனர். அப்போது இருவரது கனவிலும் ஒரே நேரத்தில் தோன்றிய முருகப்பெருமான், திருத்தணிக்கு செல்ல இயலவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் மேல் ஒரு கள்ளிப் புதருக்குள் சுயம்பு லிங்கமாக உள்ள என்னை சூரிய சந்திரரும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும், சிவ நாகமும் சதா சர்வ காலமும் பூஜிக்கின்றன. அங்கு வந்து என்னை தரிசித்து உங்கள் மனக்குறை நீக்கப் பெறலாம் என அருள்மொழி வழங்கினார்.
சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை எங்கு சென்று கண்டுபிடிப்பது என மயங்கிய சிவனடியார்களுக்கு முருகனே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் ஒரு நாகம் உங்களுக்காகக் காத்திருக்கும் அந்த நாகத்தைப் பின்தொடர்ந்தால் என்னை வந்து சேரலாம் என வழிகாட்டினார்.
திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், தாங்கள் கண்ட கனவைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் ஒரே கனவு கண்டதை அறிந்து வியந்தனர். உடனடியாகப் புறப்பட்டு முருகப்பெருமானை தரிசிக்கச் சென்றனர். கனவில் கண்டது போலவே வில்வ வனத்தில் இருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி அங்கு ஒரு நாகத்தைக் கண்டனர். அதனைப் பின்தொடர்ந்து சென்று நட்சத்திரகிரியை அடைந்தனர். அங்கிருந்த, சப்பாத்திகள்ளி புதர் ஒன்றில் நாகம் சென்று மறைந்தது. புதரை விலக்கி பார்த்த சிவனடியார்களுக்கு ஆச்சரியம். அங்கு சுயம்பு லிங்கம் ஒன்று மிளிர்ந்து கொண்டிருந்தது.
கனவில் கண்டது போலவே முருகப்பெருமான் லிங்க வடிவாக காட்சியளித்தார். லிங்கத்தை ஐந்து தலை நாகம் ஒன்று பாதுகாத்து லிங்கத்திற்கு குடைபிடித்து நின்றது. சிவனடியார்கள் அந்த நாகத்தை கண்டு பயந்ததால் அந்த நாகம் அதே நிலையில் கல்லாக மாறியது. கனவில் கண்ட அனைத்தும் நிஜமாக நடந்ததைக் கண்டு வியந்து பக்திப் பரவசமடைந்த அந்த சிவனடியார்கள் அங்கு முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து நித்திய பூசைகளை செய்து வழிபடத்துவங்கினர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகம் சுப்பிரமணியருக்கு நிழல் தந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. இது இத்தலத்தின் சிறப்பாகும்.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோவில் சிறப்புகள்
*1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.
* முருகப்பெருமான் வழிபட்ட தலம்.
*முருகன் சுயம்பு மூர்த்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட திருத்தலம்.
*சர்வ தோஷ பரிகார தலம்.
* சந்திர சூரியர்களும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை நித்தமும் வழிபடும் தலம்.
*வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் நித்ய சிவபூஜை செய்யும் திருத்தலம்.
*ராகு – கேது தோஷ நிவர்த்தி தலம்.
தல விருட்சம்: வில்வம்.
தல தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோவில் அமைப்பு
போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் வலதுபுறம் உள்ள சுயம்பு சுப்பிரமணியர் கோயிலின் பிரம்மாண்டமான வரவேற்பு நுழைவு வாயில் அமைந்துள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய அரசமரமும் பிள்ளையார் சன்னதியும் உள்ளது. மைதானத்தில் மத்தியில் சிவன் சன்னதியும் அமைந்துள்ளது. அடிவாரத்தில் ஒரு மண்டபம், தேர் நிலை, இடது பறத்தில் ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் அமைந்துள்ளன. அதனை அடுத்து சந்திர புஷ்கரணி தீர்த்த குளமும் அதன் கரையில் பிரம்மாண்டமான நந்தி சுதை சிற்பமும் அமைந்துள்ளது.
மலைப்பாதை துவக்கும் இடத்தில் சில வேல்கள் நடப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள் அதனருகில் கற்பூரம் ஏற்றிவிட்டு மலை ஏறுகின்றனர். சுமார் 200 படிகள் ஏறி நட்சத்திரக்குன்றின் உச்சியை அடையலாம். சந்திர புஷ்கரணி தீர்த்தத்தின் இடதுபுறம் வாகனங்கள் மலை ஏற தனி வழி உள்ளது.
படிகளில் ஏறிச்செல்லும் வழியில் முதலில் ஒரு கல்மண்டபமும் இடும்பன் சன்னதியும் உள்ளது. இந்த மண்டபத்தின் மேல் கூறையில் முன்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பின்புறம் முருகன் திருக்கல்யாணக் கோலமும் சுதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. சில படிகள் கடந்ததும் மற்றொரு இளைப்பாறும் மண்டபம் உள்ளது. அதில் பிரம்மாண்டமான ஆறுமுகக் கடவுளின் சுதை சிற்பம் வள்ளலார் அகத்திய முனிவர் போன்ற மகான்களின் சிறு சிறு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில படிகள் கடந்ததும் வலது புறம் மலேசிய முருகன் போன்ற பெரிய சுதை சிற்பம் அமைந்துள்ளது. அருகில் பெரிய வேல் நடப்பட்டுள்ளது. படியேறி கோவிலை அடைந்ததும் சித்தி விநாயகர் சன்னதி நேர் எதிரே அமைந்துள்ளது. வலது புறம் பிரகாரத்திற்கு வெளியே விழா மண்டபம் அமைந்துள்ளது. சித்தி விநாயகர் சன்னதியை தாண்டி நான்கு நிலை இராஜ கோபுரம் அழகாக அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்தால் இராஜ கோபுரத்தின் எதிர் திசையை பார்த்தவாறு மூலவர் சன்னதி அமைந்துள்ளது.
மூலவர் லிங்க வடிவில் சுயம்புவாக நாக குடையுடன் அருள்புரிகிறார். லிங்கத்தின் பின்புறம் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் அருள்புரிகிறார். அருகில் தனி சன்னதியில் பால முருகன் தனி விமானத்தில் மயில் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். உள்மண்டபத்தில் கல்லால் ஆன வேல் உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது புறம் சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சுமித்ர சண்டர் எழுந்தருளியுள்ளனர். மேலும் பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்..
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் திருவிழாக்கள்
முருகனே தன்னை அடியார்க்கு வெளிப்படுத்திய தலமான இந்த நட்சத்திரகிரியில், தமிழ் வருடப் பிறப்பான சித்திரை ஒன்றாம் தேதி பால்குட அபிஷேகம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைப்பூசம் போன்றவை மிக விஷேசமாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக முருகப்பெருமான் தன்னை வெளிக் காட்டிக்கொண்ட ஆடி கிருத்திகையும், பத்து நாள் விழாவான பங்குனி உத்திர பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெருகிறது. இவ்விழாவின் ஐந்தாம் நாள் முருகப்பெருமான் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சியும் ஏழாம் நாள் தேரோட்டமும் நடைபெரும்.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் சிறப்பு வழிபாடுகள்
மாதாந்திர கிருத்திகைக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்து வஸ்திரம் சாத்தி சிறப்பு பூஜைகளும், ராகு-கேது தோஷம் மற்றும் நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
பக்தர்கள் கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதும் வழக்கம். மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் இத்தல முருகனை அபிஷேகம், ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப் பெறுகின்றனர்.
குறிப்பாக கிருத்திகையன்று முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி மலர்களால் அர்ச்சனை செய்து, செம்மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகி முருகன் அருள் கிட்டும். அதேபோல் முருகப்பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து, சாம்பார் சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபட்டால் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்
தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும்,
மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் அமைவிடம்
இத்திருத்தலம் திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் செல்லும் வழியில் 34 கி.மீ. தூரத்திலும், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் 16 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம்: சேலம் விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: திருவண்ணாமலை, வேலூர் இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்: போளூர் பேருந்து நிலையம்.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்
கலியுக தெய்வமான முருகப்பெருமானைத் துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சில் பாதிப்பேர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான நம்பிக்கை. குறிப்பாக சர்வ தோஷப் பரிகாத்தலமான இத்திருத்தலத்தில் முருகப்பெருமானே சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதால் இத்தல இறைவனை தரிசித்தால் வாழ்வின் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
எனவே ஆலயாத்ரா வாசகர்கள் ஒருமுறையேனும் சுயம்பு சுப்பிரமணியர் திருத்தலம் வந்து லிங்க வடிவில் அருள் பொழியும் முருகப்பெருமானை வணங்கி சகல தோஷங்களும் நீங்கப் பெற்று நல்வாழ்வும் இறையருளும் பெற வேண்டுகிறோம்.
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோயில் முகவரி:
அருள்மிகுசுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
செங்கம், வில்வாரணி,
திருவண்ணாமலை மாவட்டம்,
தமிழ்நாடு 606906.
தொலைபேசி: +91-9994884878, +91-7826809023