what is Aani thirumanjanam? Natarajan special poojas
“ஆனி திருமஞ்சனம்” என்றால் என்ன?
நடராஜருக்கு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய அபிஷேகங்கள்
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் எடுத்துரைக்கின்றன. இதில் மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெற வேண்டும்.
சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலும் மூன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
அதேபோல் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் சதுர்த்தசி திதியில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இதில் ஆனி மாதம் உத்திராட நட்சத்திரத்திலும் மார்கழி மாதம் திருவாதிரையிலும் மட்டுமே நடராஜருக்கு அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். மற்ற நான்கு நாட்களில் மாலை வேளையில் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி திருமஞ்சனம் – நடராஜருக்கு அதிகாலை பூஜையும் சிறப்பு அபிஷேகமும்
சிதம்பரம் திருக்கோவிலில் இந்த உத்திரத் திருவிழாவானது ஆனி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும். பொன்னம்பலம் என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆனித் திருமஞ்சன விழாவை ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி ஆவார். இவர் ஆதிசேஷனின் அம்சம்.
சிதம்பரம் ஆலயத்தின் ஆதிமூலவரான அன்னல் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆனி மாதம் உத்திரத்தன்று ஆறுகால பூஜைகள் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது சிதம்பரம் கனக சபையில் நடராஜருக்கு அதிகாலை சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வது தான் ஆனித்திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடத்தப்படும்.
சிதம்பரம் நகரின் தேர்த்திருவிழா
இத்திருவிழாவின் முதல் எட்டு நாட்கள் உற்ஸவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் சிதம்பரம் நகரின் வீதிகளில் உலா வருவார்கள்.
ஆடலரசன் வீதியுலா
ஒன்பதாம் நாளன்றும் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அற்புதம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும்.
நடராஜரும் சிவகாமி அம்மையும் ஆனந்த நடனம்
அபிஷேகத்திற்குப் பின் நடராஜரும் சிவகாமி அம்மையும் ஆனந்த நடனம் புரியும் அற்புதக் காட்சி அரங்கேறும். அன்னை சிவகாம சுந்தரியும் ஆடலரசரும் ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். இதைத் தொடர்ந்து சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
ஆனி திருமஞ்சனம் – புராண வரலாறு
முனிவர்களின் தவம்
சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் காண வேண்டி வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் இருவரும் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு இறங்கிய இறைவன் நடன தரிசனம் அருள இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யு முனிவர் என்று அனைவரும் அங்கு ஒன்று கூடினார்கள்.
“சிவ சிவ” முழக்கம்
தேவர்கள் , ரிஷிகள் முனிவர்கள் என அனைவரின் வேண்டுதலுக்கிணங்க அப்போது அங்கே பேரொளி ஒன்று தோன்றியது தேவதுந்துபிகள் முழங்கின. நந்திகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்தனர். சிவசிவ என்று பக்தி முழக்கம் ஏழு உலகங்களிலும் எதிரொலித்தது.
சிவ தரிசனம்
நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின அந்த ஆனந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆடல்வல்லான்.
இவ்வாறு முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் வணங்க ஆனந்த நடனம் ஆடி இறைவன் மகிழ்ந்திருக்கும் நேரம், பக்தர்கள் தன் வேண்டுதல்களை இறைவனிடம் வைக்க ஏற்ற தருணமாகும்.
பஞ்ச சபைகள்
பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இத்தினத்தன்று தரிசிப்பது மிகவும் சிறப்பாகும்.
இங்கு செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களில் நடராஜ பெருமானின் அபிஷேகம் ஆராதனைகளைக் கண்டு வணங்கி இறைவன் அருள் பெறலாம்.
கலையார்வம் மிக்க மாணவர்கள் அன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.
ஆனித்திருமஞ்சனம் வழிபாட்டு பலன்கள்
ஆனி திருமஞ்சன நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் கல்வி கலைகளில் சிறந்து விளங்கலாம், திருமண பாக்கியம் கிடைக்கும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
திருச்சிற்றம்பலம்
Pingback: Pateeswarar temple Perur - Coimbatore - Alayatra - Temple tour guide and tour plans