திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – அறுபடை வீடுகளில் முதல் படைவீடு
ஆலயாத்ரா அன்பர்களுக்கு வணக்கம்.
இந்து சமய வழிபாட்டு முறைகள் 6. அவை சூரியனை முதன்மை தெய்வமாக கொண்டு வழிபடும் முறையான சௌரம், சிவனை முதன்மை தெய்வமாக கொண்டு வழிபடும் முறையான சைவம், சக்தி வழிபாட்டு முறையான சாக்தம், விஷ்ணு வழிபாட்டு முறையான வைணவம், கணபதி வழிபாட்டு முறையான கணாபத்யம் மற்றும் முருகனை முதன்மை தெய்வமாக கொண்டு வழிபடும் முறையான கௌமாரம் எனப்படுகிறது.
இதில் முருகன் வழிபாடு உலகம் முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில் இன்னும் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் முருகன் ஆலயங்கள் எங்கும் நிறைந்துள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்பதால் ஆலய வழிபாடு மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களின் பெரும்பகுதி முருகனை போற்றும் வகையில் அமைந்துள்ளது. திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தபுராணம் மற்றும் திருமுருகாற்றுப்படை போன்றவை மிக முக்கியமான நூல்களாகும்.
இவற்றில் திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு என்னும் இலக்கிய நுள்களில் முதல் நூலாக அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராகவும் பண்டியனின் தமிழ் சங்கத்தில் முதன்மை புலவராகவும் விளங்கிய நக்கீரன் என்னும் தமிழ் புலவரால் இயற்றப்பட்ட இலக்கியமே திருமுருகாற்றுப்படை ஆகும்.
ஆற்றுபடை என்பது அரசரை போற்றி பாடல் இயற்றி பரிசு பெறும் பாணர்களை ஆற்றுபடுத்தும் இலக்கியமாகும். முருக கடவுளின் அருள் பெற விரும்பும் அடியார்களை முருகப்பெருமானின் ஆறு திருத்தலங்களுக்கு செல்லுமாறு ஆற்றுப்டுதும் வகையில் திருமுருகாற்றுப்படை இயற்றப்படுள்ளது.
அதில் முதலாவதாக விளங்கும் திருத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திருக்கோவிலின் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மூலவர்: முருகன்- சுப்பிரமணிய சுவாமி.
அம்மன்: தெய்வானை
சிவன்- பரங்கிநாதர்
அம்பாள் – ஆவுடை நாயகி.
தல விருட்சம்: கல்லத்தி மரம்
தல தீர்த்தம்: மொத்தம் 11 தீர்த்தங்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் பெயர் காரணம்:
பரம்பொருளான சிவபெருமானே குன்று (சிறிய மலை) வடிவாகக் காட்சியளிக்கும் இடம் என்பதால் திரு என்ற சிறப்பை உணர்த்தும் அடைமொழி சேர்த்து திரு+பரம்+குன்றம் – திருப்பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது.
இக்குன்றமானது, லிங்க வடிவில் காட்சியளிப்பதால் சிவபெருமானே குன்றின் வடிவில் அருள்புரிவதாக ஐதீகம். பிரணவத்தின் பொருளை முறை தவறி கேட்டதால் வந்த குற்றத்தை நீக்க முருகப்பெருமானுக்கு அருள்புரிந்தமையால் இத்தல ஈசன் பரங்கிநாதர் என்றும், பார்வதி ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றனர்.
திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைகாஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இம்மலை பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. அகநானூற்றில் இந்த மலை, முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசிவம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை எனப் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
முற்காலத்தில் தெற்கு நோக்கி அமைந்த குடவரை கோவில் என்பதால் தென்பரங்குன்றம் என்று அழைக்கப்பட்டது. பின்பு அக்கோவில் சிதிலமடைந்ததால் கோவிலின் பின்புறம் புனரமைக்கப்பட்டு வடக்கு நோக்கி மூலவர் சன்னதி அமைக்கப்பட்டது. எனவே திருப்பிய பரங்குன்றம் என்று வழங்கப்பட்டு நாளடைவில் துப்பரங்குன்றம் என மருவியதாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் தலவரலாறு:
துர்கா தேவி பிரதிஷ்டை செய்த லிங்கம்: அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் வழங்கப்பட்டாலும் இது ஆதியில் சிவாலயமாகவே வழங்கப்பட்டது. இத்தல இறைவன் சத்யகிரி நாதர் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறார். 9 நாட்கள் போரிட்டு மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தார். அந்த தோஷம் நீங்க சிவனை நோக்கி தவம் செய்தார். அப்போது அவர் முன் தோன்றிய சிவன் தான் மலை வடிவாக இருப்பதாகவும் அங்கு வந்து ஒரு லிங்கம் அமைத்து தன்னை வணங்கும்படியும் கூறினார். பரமனே (சிவன்) குன்றாக இருப்பதால் பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு துர்க்கை பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசன் இத்தல இறைவன் பரங்கிரி நாதராக அருள்பாலிக்கிறார் என்பது தல வரலாறு.
முருகப்பெருமானின் தோஷம் நீக்கிய தலம்:
ஒருமுறை அன்னை பார்வதி வேண்டிக்கொண்டதால் திருக்கயிலாயத்தில் சிவபெருமான், அவருக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகப்பெருமான் தன் தாயாரின் மடியில் அமர்ந்திருந்தார். அன்னையுடன் சேர்ந்து தானும் மந்திர உபதேசத்தைக் கேட்டார். எந்த ஒரு மந்திரத்தையும் குருவின் மூலமாகவே உபதேசம் பெறவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் பாவம் என சாத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் மறைமுகமாக முருகன் மந்திரத்தின் பொருளை அறிந்து கொண்டார். பிரணவத்தின் வடிவமே
முருகப்பெருமான் தான் என்றாலும், பிரணவப் பொருள் மறந்த பிரம்மனுக்கும், தன் தந்தையான சிவபெருமானுக்கும் அதன் உட்பொருளை உபதேசித்தவர் முருகப்பெருமான் என்றபோதிலும் முறையற்ற வகையில் பிரணவத்தின் பொருளை அவர் கேட்கும்படி நேர்ந்த அந்த பிழைக்குப் பரிகாரமாக லிங்க வடிவில் சிவபெருமானின் மலையாக காட்சி அளிக்கும் திருப்பரங்குன்றத்திற்கு முருகப் பெருமான் வந்து தவம் செய்தார். குழந்தையாக இருந்தாலும் அவரது நீதிதவராத தன்மையை பாராட்டி, முருகனின் தவத்தை மெச்சி சிவபெருமானும் அன்னை பார்வதியும் ஒரு தை பூசத் திருநாளில் முருகன் முன் காட்சி தந்து அருள் புரிந்தனர். முருகனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் சுப்பிரமணியர் சன்னிதி எதிரே ஆதி சொக்கநாதராக தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்தார். எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசிக்கும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேசுவரர் சன்னிதியில் வழிபடுவதை இன்றும் கடைப்பிடிக்கின்றனர்.
முருகப்பெருமான் சூரபத்மனையும் அவனது சேனைகளையும் போரில் அழித்து தேவர்களை சிறைமீட்டார். தேவ அசுர போரில் வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானுக்குத் தன்னுடைய மகளாகிய தெய்வயானையைத் தேவேந்திரன் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்படி தேவாதி தேவர்களும் முனிவர்களும் புடை சூழ, திருமாலும் திருமகளும் எழுந்தருளி அருள்பாலிக்க, பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, அண்டங்கள் அனைத்திலும் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ச்சிகொள்ள இத் திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் திரு முருகன்-தெய்வயானை திருமணம் இனிதே நடைபெற்றது என திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.
நக்கீரருக்கு அருள் தந்த தலம்:
சிவபெருமானை எதிர்த்து வாதம் செய்த பழி நீங்க தமிழ் புலவர் நக்கீரர் திருப்பரங்குன்றத்தில் வந்து தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று விழுந்தது. அதன் ஒரு பாதி மீனாக நீருக்குள் சென்றது மறுபாதி பறவையாக மாறி நீரை விட்டு மேலே பறக்க முயன்றது. இதை கண்டு வியந்த நக்கீரரின் தவம் கலைந்தது. அந்த சமயத்தில் சிவ பூஜையில் முழுவதும் ஈடுபடாமல் கவனம் சிதறும் 1000 முனிவர்களை விழுங்கும் கொள்கை கொண்ட கர்க்கிமுகி என்ற அரக்கி அங்கு வந்து நக்கீரரை பிடித்து மலை குகையில் அடைத்தது. அந்த அரக்கி பிடித்த 1000மாவது சிவனடியார் நக்கீரர். அவருக்கு முன்னதாக பிடிபட்ட 999 சிவனடியார்களுக்கு முனிவர்களும், 1000 அடியவர்களை உண்ணும் அரக்கியின் கொள்கை நிறைவேற கடைசி ஒருவர் கிடைக்காததால் நாங்கள் உயிர் பிழைத்திருந்தோம் கடைசியாக நீ சிவபூஜை கலைந்ததால் நாங்கள் அனைவரும் இப்பொழுது அரக்கிக்கு உணவாக போகிறோம் என்று நக்கீரரை திட்டி தீர்த்தனர். எனவே நக்கீரர் தமிழ் பாடல் பாடி முருகனை வணங்கினார். முருகப்பெருமான் அவரின் தமிழுக்கு மனமகிழ்ந்து தன் வேலால் மலையை தகர்த்து அரக்கியை சம்ஹாரம் செய்து சிவனடியார்களை காத்தார். அப்போது நக்கீரர் தன்னை பூதம் தீண்டியதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க கங்கை நதியில் நீராட அருள் புரிய வேண்டினார். அப்போது முருகன் தன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை அங்கே ஊற்றெடுக்க செய்தார். நக்கீரர் அந்த காசி தீர்த்ததில் நீராடி பாவம் நீங்கப் பெற்றார். என தல வரலாறு கூறுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் சிறப்புகள்:
- முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.
- திருப்பரங்குன்றம் மலை லிங்க வடிவில் அமைந்துள்ளது. முற்காலத்தில் சிவாலயமாக இருந்துள்ளது.
- வேத வியாசர் மற்றும் பராசர முனிவரால் வழிபட்ட திருத்தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவர பதிகங்கள் பாடப்பெற்ற திருத்தலமாகும்.
- நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறைகள் நீங்கப்பெற்றார்.
- இந்த கோயிலில் கி.பி 8-ம்நூற்றாண்டை சேர்ந்த, மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட அரியவகை குடைவரைக் கோயிலாகும். நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
- இக்கோவிலின் அருகில் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும் அமைந்துள்ளதால் அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- இக்கோயிலில் கி.பி 773 வருடத்தை சேர்ந்த பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் நிகழ்ந்த தலம் என்பதாலும் அறுபடை வீடுகளில் ஒரு கோவில் என்பதாலும் பிற்காலத்தில் முருகன் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.
- வேறெந்த கோயிலிலும் இல்லாத வகையில் இக்கோயிலில் மூலவர் அமர்ந்த நிலையில் திருமண கோலத்தில் தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வள்ளி இல்லாமல் தெய்வானையுடன் முருகன் அருள்புரியும் ஒரே திருத்தலம் இதுவேயாகும்.
- இத்தல சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்வதால் தேவி லிங்கம் என்று அழைக்கப்படுகிரார். சந்தாகாரம் என்னும் மருந்து பூசப்பட்ட திருமேனி என்பதால் சாம்பிராணி தைலம் பூசி வழிபடுகின்றனர்.
- இக்கோயிலின் மூலவர் முருகப்பெருமான் என்றாலும் கருவறையில் தம்பதி சமேத முருகப்பெருமான், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பக விநாயகர், துர்க்காதேவி ஆகிய ஐந்து தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். கருவறை தெய்வங்களின் திருவுருவங்கள் ஒரே பாறையில் குடையப்பட்டுள்ளன.
- இத்திருத்தல மூலவர் குடைவரை திருமேனி என்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. அபிஷேகங்கள் வேலுக்கு செய்யப்படுகின்றன.
- பிரகாரம் இல்லாத ஒரே சிவாலயம் இத்தலம் மட்டுமே. கோவில் பிரகாரம் சுற்ற விரும்பினால் திருப்பரங்குன்றம் மலையை தான் சுற்றி வர வேண்டும்.
- திருவண்ணாமலையில் மலையே சிவன் வடிவமாக காட்சி தருகிறது என்பது ஐதீகம். அவ்வாறே திருப்பரங்குன்றமும் லிங்க வடிவில் காட்சி அளிப்பதால் திருவண்ணாமலை போலவே திருப்பரங்குன்றம் குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். அதற்காக மலை உச்சியில் காத்திகை தீபத்தூண் உள்ளது.
- தினமும் 8 கால பூஜைகள் நடைபெறுவது இத்திருத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.
- இக்கோவிலில் சுவாமியைச் சுமந்து செல்லும் சீர்பாத சேவையை வீரபாகு வழித் கோன்றல்கள் என்று அறியப்படும் செங்குந்த முதலியார் மரபை சேர்ந்தவர்கள் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.
- இத்திருதலத்தில் சிவபெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு பின்புறத்தில் நந்தி பகவானும் நின்ற நிலையில் இருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும்.
- இத்தல மூலவருக்கு மயில் வாகனம் இல்லை. மாறாக யானை மற்றும் ஆட்டுகிடாய் வாகனங்கள் உள்ளன.
- கருவறைக்கு விமானம் இல்லை. மாலையே விமானமாக உள்ளது.
- இக்கோவில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- திருவண்ணாமலை போலவே திருப்பரங்குன்றம் மலையையும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
- இத்திருத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் வெள்ளை மயில்களை காண முடியும். இத்தல இறைவனை தரிசிக்க தேவர்களும் முனிவர்களும் வெள்ளை மயிலாக வருவதாக நம்பப்படுகிறது.
- விழாக்காலங்களில் சிவனுக்கு கொடியேற்றப்படுகிறது. ஆனால் முருகனே திரு வீதி உலா வருகிறார் என்பது சிறப்பு.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் அமைப்பு:
கோயிலின் கோபுரம் 7 நிலைகள் கொண்டது. 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகளும் சிகரப் பகுதியில் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தை தாண்டினால் கொடிமரம் பலிபீடத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் நுழைவாயிலிலுள்ள நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் வகையில் 10 பெரிய கற்றூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முருகன் தெய்வானை திருமணக்கோலம் அமைக்கப்பட்டுள்ளது.
கொடிமரத்தின் அருகே பெரிய பிரதோஷ நந்தி, மலையை நோக்கியபடி இருக்கிறார். அருகே மூசஹம் மற்றும் மயில் வாகனம் உள்ளன. இத்திருதலத்தில் சிவபெருமான் பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னதியில் அருள்புரிகிறார். இவருக்கு பின்புறத்தில் நந்தி பகவான் நின்ற நிலையில் இருக்கிறார். நந்தி பகவான் இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு மகாலக்ஷ்மியுடன் எழுந்தருளி உள்ளார். பெருமாள் தனது மைத்துனரான சிவனுக்கு சேவை செய்ய நந்தியாக இருக்கிறார் என்பது ஐதீகம். எனவே இத்தலம் மால்விடை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மால் என்றால் திருமால் விடை என்றால் காளை மாடு என்று பொருள். திருமால் நந்தியாக இருக்கும் கோவில் என்று பொருள். அம்பாள் ஆவுடை நாயகி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தில் நந்திகேஸ்வரர் துணைவியார் காலகண்டியுடன் எழுந்தருளி உள்ளார். அருகில் இரட்டை விநாயகர் சன்னதி உள்ளது. சிவசூரியனும் சந்திரனும் பிரகாரத்தின் இருபுறமும் அமைந்துள்ளனர். மண்டபத்தில் அன்னை சிவகாமியுடன் நடராஜப்பெருமான், அன்னபூரணி தாயார், சப்த ரிஷிகள் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். குடவரையின் வலதுபுறம் பஞ்சலிங்கங்கள் அம்பாள்களுடன் அருள்புரிகின்றனர். அருகில் வள்ளி தெய்வயானை சமேத கிருத்திகை முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். அருகே கருடத்தாழ்வர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து சன்னிதிகள் உள்ளன. மேலும் அன்னபூரணி மற்றும் ஜேஷ்டா தேவிக்கு இரண்டு குகை சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையில்
சுப்ரமணியசுவாமி தெய்வானை சமேதராக அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் அருள்புரிகிறார். அருகே நாரதர், பிரம்மன், வீணை இல்லாமல் நின்ற கோலத்தில் சரஸ்வதி மற்றும் சூரிய சந்திர கந்தர்வர்களும் காட்சியளிக்கின்றனர். மூலவரின் கீழே யானை வாகனமும் ஆட்டுகிடாய் வாகனமும் அமைந்துள்ளன. மயில் வாகனம் இல்லை. அவரின் வலதுபுறத்தில் நடராஜப்பெருமான் அருள்பாலிக்கிறார். அவரது வலது மேற்புறத்தில் பஞ்சமுக விநாயகரும் எட்டு திசைகளுக்கும் அருள்புரியும் அஷ்ட விநாயகர்கள் காட்சி தருகின்றனர். கோஷ்ட தெய்வங்களான துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களும் மூலவர் சன்னதி போலவே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கற்பக விநாயகர் வேறெங்கும் இல்லாத வகையில் கையில் கரும்பு வைத்து தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு உள்ள தட்சணாமூர்த்தி இடது கையை தனது காலின் கீழ் உள்ள நாகத்தின் தலை மேல் வைத்தபடி காட்சி அளிக்கிறார். அர்த்த மண்டபத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சன்னிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களில் காணப்படும் ஆடை மடிப்பும் கலை வேலைப்பாடுகளும் பாண்டிய மன்னர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.
முன்மண்டபத்தில் நவவீரர்களுக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும் பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
திருப்பரங்குன்ற மலை உச்சியில் நக்கீரருக்கு முதுகப்பெருமான் தன் வேலால் வரவழைத்த வற்றாத கங்கை காசி தீர்த்தமும் சிவனடியார்களை அடைத்து வைத்திருந்த பஞ்சாட்சர குகையும் அமைந்துள்ளன. அதன் அருகிலேயே மேற்கு நோக்கி காசி விஸ்வநாதர் விசாலாட்சி சன்னிதியிம் எதிரில் சுப்பிரமணியர் சன்னதியும் நக்கீரருக்கு தனி சன்னிதியும் அமைந்துள்ளது. தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும் ஒரு சிவ திருமேனியும், அம்பிகை, சுப்பிரமணியர், கற்பக விநாயகர் மற்றும் பைரவர் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன.
சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றத்தின் உச்சியில் காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது.
மலையின் தென்பகுதியில் தென்பரங்குன்றம் உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது. மலையின் தென் பகுதியில் கற்படுகைகளுடன் சமணர் குகை உள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் திருவிழா:
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, திருக்கார்த்திகை, தை பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் சிறப்பு வழிபாடுகள்:
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், நாட்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் தங்கள் துயர் நீங்க இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி முன்பு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
மூலவரின் வேல் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலை மேல் உள்ள காசி விசுவநாத சுவாமி சன்னதிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
ஆனி மாத பவுர்ணமி தினத்தன்று இத்தல சிவபெருமானுக்கு முக்கனிகள் படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்படுகிறது.
திருமண தடை புத்திர பாக்கியம் வேண்டுவோர் இத்திருத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.
இராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இம்மலையை தினமும் வலம் வந்து வழிபட்டால் தீராத வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் எனத் திருஞான சம்பந்த பெருமான் தன் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தோல் நோய்கள் உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள லக்ஷ்மி தீர்த்ததில் உப்பும் மிளகும் போட்டு வழிபட்டு வழிபடுகின்றனர்.
இத்திருத்தலத்தில் பெரும்பாலும் பக்தர்கள் நேர்த்திகடனாக அன்னதானம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் வழிபாட்டு பலன்கள்:
திருப்பரங்குன்றத்தில் தவம் செய்த முருகப்பெருமானுக்குச் சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்து பிரணவத்தின் பொருளை முறை தவறி அறிந்ததன் பிழை போக்கி அருளினார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும் முருகக் கடவுளையும் வழிபடுபவர்கள் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் நடைதிறக்கும் நேரம்:
திருக்கோயில் நடை காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் அமைவிடம்:
இக்கோயில், மதுரை மாவட்டதில், மதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் அமைந்துள்ள.
அருகில் உள்ள விமான நிலையம்:
மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது.
அருகில் உள்ள இரயில் நிலையம்:
மதுரை மத்திய இரயில் நிலையம் மற்றும் திருப்பன்றங்குன்றம் இரயில் நிலையம்.
மதுரை – தூத்துக்குடி – திருநெல்வேலி இரயில்கள் செல்லும் பாதையில் திருப்பன்றங்குன்றம் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
அருகில் உள்ள பேருந்து நிலையம்:
மதுரை மத்திய பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம். மேலும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அனைத்து நகரங்களில் இருந்தும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் முகவரி:
அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் 625005.
தொலை பேசி: 0452-2482248, 9443382946






