திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாம் அறுபடைவீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் திருத்தலத்தையும் அலைகடல் வாயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமான் பற்றியும் இப்பதிவில் விரிவாக காணலாம். குன்றுள்ள இடமெல்லாம் குமரன் இருப்பான். ஆனால் அறுபடை வீடுகளில் கடற்கரையில் இருக்கும் ஒரே முருகன் ஆலயம் இந்த திருச்செந்தூர் ஆலயம் மட்டுமே. முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போர் இத்திருத்தலத்தில் துவங்கியதாக நம்பப்படுகிறது.
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
அம்மன்: வள்ளி, தேவசேனா
தல விருட்சம்: பன்னீர்/கதலி மரம்.
தல தீர்த்தம்: சரவண பொய்கை.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் பெயர் காரணம்:
முருகனின் மற்ற படைவீடுகள் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வறுமையை வெல்ல ஆற்றுப்படுத்தி பாடிய தலங்களுக்கும். ஆனால் உண்மையாகவே சூரனை வதம் செய்ய படை நடத்திச் சென்ற முருகன் தன் படை பரிவாரங்களோடு தங்கி இருந்த படைவீடு இந்த திருச்செந்தூர் திருத்தலம் தான். இத்தல முருகப் பெருமான் சூரனை வெற்றி கொண்டு ஆட்கொண்டதால் இவர் “செயந்திநாதர்’ என அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது என கூறப்படுகிறது. செயந்தி என்றால் வெற்றி என்று பொருளாகும். எனவே இத்தலமும் “திருசெயந்திபுரம்’ என அழைக்கப்பெற்று பின் “திருச்செந்தூர்’ என மருவியதாக கூறப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மற்ற ஐந்து தலங்களும் குன்றின் மேல் அமைந்துள்ளது ஆனால் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த கோயிலும் கடலுக்குள் இருந்த சந்தன மலை என்ற குன்றின் மேல்தான் அமைந்திருக்கிறது. காலப்போக்கில் கடல் உயர்ந்து மலை மறைந்து போனது. இப்போது அந்த சந்தன மலை இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது பெருமாள் சந்நிதிக்கும் வள்ளி குகைக்கும் அருகில் சிறு குன்று போல் அமைந்துள்ளதை காணலாம். எனவே இந்த திருத்தலம் கந்தமாதன பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலம் பழங்காலத்தில் கதலிவன சேத்திரம் அதாவது வாழை மரங்களுக்கு இடையே அமைந்துள்ளது கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
சூரபத்மனை வதம் செய்து தங்களுக்கு விடுதலை தந்தமையால் முருகப்பெருமானை வணங்கிய தேவர்கள் மற்றும் முனிவர்கள் இத்தலத்தில் பன்னீர் மரங்களாக மாறி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் சேயோன் என்றும் சீரலைவாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் தலவரலாறு:
வீரமாஹேந்திரபுரம் என்ற நகரை நடுக்கடலில் நிர்மாணித்து அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆட்சி செய்து வந்தான் சூரபத்மன் என்ற அசுரன். இவன் சிவபெருமானிடம் கடும் தவம் புரிந்து சிவபெருமானின் சக்தியால் அன்றி வேறு யாராலும் அழிக்க முடியாத ஒரு அறிய வரத்தை பெற்றான். நாளடைவில் ஆணவத்தால் தேவர்களை சிறையில் அடைத்துத் துன்புறுத்தி வந்தான். எல்லை கடந்து தீங்கிழைத்த அவனை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப்பெருமான் அவதரித்தார். தக்க சமயம் வந்தபோது தீபாவளியை அடுத்து வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து 6 நாட்கள் கடும் தவம் இருந்து அன்னை ஆதிபராசக்தியிடம் யாராலும் வெல்ல முடியாத, அன்னை பார்வதியின் அம்சமான சக்திவேலை வரமாக வாங்கி சூரபத்மனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். அதே வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் திருச்செந்தூரில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தர முருகப்பெருமான் இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். சிறந்த சிவ பக்தனான சூரபத்மனை அழிக்க மனமில்லாத முருகப்பெருமான் தனது படைத்தளபதியான வீரபாகுவை இத்திருத்தலத்தில் இருந்து தான் சூரனிடம் தூது அனுப்பினார். வீரபாகுவின் நல்லுரைகளை ஏற்காத அசுரன் போர் செய்ய விரும்பினான். வேறு வழி இல்லாமல் முருகன் தன் படைகளுடன் சென்று அசுரனை வதம் செய்தார். தேவ குருவான வியாழன் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் முருகப் பெருமான் நிரந்தரமாக எழுந்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் தேவ லோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து இங்கு ஆர் அழகிய ஆலயம் எழுப்பினார் என்று தலவரலாறு கூறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் சிறப்புகள்:
- சுமார் 3000 ஆண்டுகள் பழமையான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
- இங்கு இராஜகோபுரம் மூலவருக்கு பின்புறம் உள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.
- இத் திருக்கோயிலில் முருகன் பூஜித்த சிவலிங்கத்துக்கு முதல் பூஜை நடைபெற்ற பிறகே முருகனுக்கு பூஜை நடைபெற்றது.
- பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு ஒரு உற்சவர் திரு மூர்த்தம் தான் இருக்கும் ஆனால் இந்த கோவிலில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமாரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இதில் குமாரவிடங்கர் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
- இத்தல இறைவனுக்கு 9 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
- ஒவ்வொரு பூஜையின் போதும் சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, அப்பம், தோசை, நெய்சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், வேகவைத்த பாசிபருப்பு வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.
- 12 நாள் சாஷ் விழாவின் கடைசி நாளன்று திரு வீதி உலா வரும் போது ஊர் மக்கள் முருகன் மீது மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.
- வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் இத்திருத்தலத்தில் தீபாவளி அன்று வெள்ளி பல்லக்கில் புத்தாடைகள் வைத்து திருவீதி உலா எடுத்துவந்து அனைத்து திரு மூர்த்தங்களுக்கும் அணிவிக்கின்றார். போரில் வென்ற ஜெயந்தி நாதரான முருகப்பெருமானுக்கு தன் மகளான தெய்வானையை திருமணம் செய்து வைத்த தேவேந்திரன் தன் மருமகனுக்கு தீபாவளி சீராக புத்தாடைகள் கொண்டு தருவதாக ஐதீகம்.
- இத்தலத்தில் மூலவருக்கு பூஜை செய்வதற்கு முன்பு, முருகனின் படைத்தலைவரான வீரவாகு தேவருக்கே முதல் பூஜை நடத்தப்படுவது சிறப்பு அம்சமாகும்.
- தினமும் மதிய உச்சிகால பூஜை முடிந்த பின் மேள தாளத்துடன் பால் அன்னம் எடுத்துச்சென்று கடலில் கரைத்து கங்கை பூஜை செயயப்படுகிறது.
- திருச்செந்தூர் கோவிலின் மற்றொரு சிறப்பு பன்னீர் இலை விபூதி பிரசாதம் ஆகும். பக்தர்களுக்கு முருகப்பெருமானே தனது 12 திருக்கரங்களால் விபூதி வழங்கியதாக ஐதீகம். அதன் காரணமாக ஒவ்வொரு பக்கத்திலும் 6 நரம்புகள் என மொத்தம் 12 நரம்புகள் கொண்ட பன்னீர் மர இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் அமைப்பு:
ராஜகோபுரம்
இந்த கோவிலின் இராஜகோபுரம் சுமார் 157 அடி உயரம் உயரத்தில் 9 நிலைகளைக் கொண்டு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்க இராஜகோபுரம் அவருக்கு பின்புறத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது வேறெந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டிவிழாவில் ஏழாம் நாளான முருகன் திருக்கல்யாண வைபவ நாளன்று மட்டும் நள்ளிரவில் இந்த வாசல் திறக்கப்படும். அப்பொழுதும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
முருகன் பூஜித்த சிவலிங்கமும் பஞ்சலிங்கங்களும்.
மூலவர் சன்னதிக்கு பின் புறம் முருகப்பெருமான் பூஜித்த லிங்கம் அமைந்துள்ளது. கருவறைக்கு வலதுபுறம் “பஞ்சலிங்க’ சன்னதி அமைந்துள்ளது. வெளியிலிருந்து முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்களை தரிசனம் செய்ய இயலாது. மூலவரின் இடப்புறம் உள்ள சிறு நுழைவாயிலின் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலம் வந்தால் வலப்புறம் உள்ள பாதாள பஞ்சலிங்களை தரிசனம் செய்ய இயலும். மார்கழி மாதத்தில் இந்த லிங்கங்களை வழிபட்ட தேவர்கள் வருவதாக ஐதீகம்.
குரு தட்சிணாமூர்த்தி:
திருச்செந்தூர் குரு தலமாக விளங்குகிறது. பிரகாரத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி மேதா மலை, கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள் என 4 ஆசனங்களின் மேல் அமர்ந்து அருள் புரிகிறார். அவருக்கு பின் இருக்கும் கல் ஆலமரத்தில் நான்கு வேதங்களும் நான்கு கிளிகளாக உள்ளன. அறிவும் ஞானமும் தரும் குருவாக இருப்பதால் இவர் ஞானஸ்கந்த மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வழக்கமாக கைகளில் அக்னி உடுக்கையுடன் காணப்படும் குரு தட்சிணாமூர்த்தி மான் மழுவுடன் காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
மூலவர் :
முருகப்பெருமான் சூரனை போரில் வென்றபோது அறியாமல் பல உயிர்களை வதைத்த பாவம் நீங்க சிவபூஜை செய்தார். அதற்கு அடையாளமாகவே தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்து நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் இடப்புறத்திலுள்ள ஒரு கையை இடுப்பில் வைத்து மற்றொரு கையில் ஜபமாலை கொண்டு வலப் புறத்திலுள்ள ஒரு கையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் சிவ பூஜை செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். தவக்கோலத்தில் உள்ள இவரது தவம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே மூலவருக்கு பிரகாரம் இல்லை. இவருக்கு இடது பின்புற சுவரில் இவர் பூஜித்த லிங்கம் இருக்கிறது. தினமும் இந்த லிங்கத்திற்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே முருகனுக்குத் தீபராதனை நடக்கிறது.
மூலவருக்கு பின்புறம் வள்ளி தேவசேனா தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு பக்தர்களுக்கு சாம்பிராணி புகை போடப்படுகிறது.
இரண்டாவது மூலவர்:
மூலவரை தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது இடதுபுறம் தெற்கு நோக்கி ஆறு முகங்கள் பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதி உள்ளது. உற்சவர் சன்னதி என்றாலும் இது இரண்டாவது கருவறை போலவே கருதப்படுகிறது. இந்த சன்னதியில் வலம் வர பிரகாரம் உள்ளது. இந்த சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் ஒரு லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களையும் தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். மூலவருக்கு எதிரே நந்தி வாகனமும் இந்திர, தேவ மயில்களும் அமைந்துள்ளன.
சண்முகநாதரின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப் புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாக கருதப்படுகிறது.
பெருமாள் சன்னதி:
மூலவர் சன்னதிக்கு அருகில் மகாவிஷ்ணு சன்னதி அமைந்துள்ளது. இங்கு பெருமாள் சயன கோல பெருமாளாக அதாவது பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த பெருமாள் குடைவரை திருமேனி என்பதால் அபிஷேகம் செய்யப் படுவது இல்லை. சூரசம்ஹாரத்திற்குச் செல்வதற்கு முன்பு முருகப்பெருமான் இந்த பெருமாளிடம் சக்கராயுதம் பெற்றதாக ஐதீகம்.
மற்ற சன்னிதிகள்:
கோயிலுக்கு வெளியே தூண்டுகை விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இவர் முருகன் சன்னதிக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். எனவே முதலில் இவரை வணங்கியே முருகன் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.
முதல் பிரகாரத்தில் சித்தி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி வள்ளப விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
கருவறை உட்பகுதியில் சூரியன் மற்றும் சந்திரன் லிங்க வடிவில் உள்ளனர்.
மேற்குப் பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு தனிச்சன்னதி உள்ளது.
சூரபத்மனை ஆட்கொண்ட பின் அவர் மயிலாகவும், சேவலாகவும் மாறியதன் ஐதீகத்தின்படி மயிலுக்கான தனி சன்னதியும் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
காலபைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
நாழிக்கிணறு:
நாழிக்கிணறு திருச்செந்தூர் ஆலயத்தின் வலதுபுறம் கடற்கரையில் அமைந்துள்ள 24 நன்னீர் ஊற்றுகல் . சூரபதுமனை அழிக்க தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டிருந்த முருகப்பெருமான் படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் ஒரு கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாழிக்கிணறு தமிழகத்திலுள்ள மிகவும் புண்ணியமான தீர்த்தங்களில் ஒன்று.
இங்குள்ள சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு முருகப்பெருமான் தவழ்வது போலவும் கார்திகை பெண்கள் அருகே இருப்பது போலவும் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் திருவிழா:
மற்ற முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டிவிழாவானது முதல் நாள் காப்புகட்டுடன் தொடங்கியது ஆறாம் நாள் சூரசம்ஹாரம் ஏழாம் நாள் முருகன் திருக்கல்யாணம் என ஏழு நாட்கள் நடைபெறும். ஆனால், திருச்செந்தூரில் ஏழாம் நாள் திருக்கல்யாணம் முடிந்ததும் அடுத்த 5 நாட்களுக்கு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த ஐந்து நாட்களும் முருகபெருமான் தம்பதி சமேதராக திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இது தவிர பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் போன்ற முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இதுதவிர ஆண்டுதோறும் ஆவணி மற்றும் மாசி மாதங்களிலும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்த விழாக்களில் எட்டாம் நாளன்று உற்சவர் சண்முகர் பச்சை சாத்தி திருக்கோலத்தில் பச்சைப் பட்டு உடுத்தி, பச்சை மாலைகள் அணிந்து வீதி உலா வருகிறார். சண்முகர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அம்சமாகத் திகழ்கிறார் என்பது ஐதீகம். இதில் 7-ம் நாள் சிவப்பு சாத்தியில் சிவனின் அம்சமாகவும், 8-ம் நாள் வெள்ளை சாத்தியில் பிரம்மாவின் அம்சமாகவும், பகலில் பச்சை சாத்திதிருக்கோலத்தில் மகா விஷ்ணுவின் அம்சமாகவும் அருள் பாலிக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்:
காரிய தடை, திருமணத் தடை உள்ளவர்கள் தடைகள் அனைத்தும் நீங்க இத்தல இறைவனிடம் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
இத்தல முருகன் குருபகவானுக்கு அருள்புரிந்த இறைவன் மட்டுமல்லாது நவகிரகங்களில் குருவாகவே அருள்பாலிக்கிறார். எனவே ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து இரவு முழுவதும் தங்கி இருந்து வியாழ கிழமை அன்று முருகனை தரிசித்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
சாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து ஆடை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஐப்பசி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சஷ்டி அன்று சூரபத்மனை வதம் செய்தார் முருகப்பெருமான். அதுவே மஹா சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி முதல் நாளில் திருச்செந்தூர் ஹோம மண்டபத்தில் அறுகோண யாக குண்டம் அமைத்து வள்ளி தெய்வயானை சமேதராக முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து, தேவாதி தேவர்கள் அனைவரையும் ஆவாகனம் செய்து அதிகாலை முதல் உச்சி காலம் வரை யாகம் நடத்தப்படுகிறது. வெற்றிக்காக செய்யப்படும் இந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொள்வதால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மறைமுக பாவை நீங்கும்.
சூரனை வெற்றி கொண்ட பின்பு வெற்றி நாயகனாக முருகன் திரும்பியதும் பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சந்நிதியில் முருகன் எழுந்தருளுவார். அப்போது அவருக்கு எதிரில் உள்ள கண்ணாடியில் காட்சி தரும் முருகப்பெருமானின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். இது சாயா அபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. போரால் சினம் கொண்டிருக்கும் முருகன் கோபம் தணிந்து குளிர இந்த அபிஷேகம் செய்யப்படுவதாக நம்பிக்கை. இந்த அபிஷேகம் முடிந்த பின் வேல் குத்தும் நிகழ்வு நடைபெறும். இத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது. இந்த அபிஷேகதில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் மனம் குளிர்திருக்கும் முருகன் வேண்டும் வாரமெல்லாம் அருள்வார் என்பது நம்பிக்கை.

சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் தெய்வானை ஆலயத்தின் தபசு மண்டபத்தில் எழுந்தருளி முருகனை மணமகனாக வேண்டி தபசு செய்வார். மாலையில் மயில் வாகனத்தில் குமாரவிடங்கர் தெய்வயானை முன்பு எழுந்தருளி அவரது தவத்தை ஏற்று திருமண நிச்சயதார்த்தம் செய்வார். பிறகு நள்ளிரவில் முருகப்பெருமான் தெய்வயானை திருக்கல்யாணம் நடந்தேறுகிறது. தேவேந்திரன் தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்து வைத்ததோடு தேவ மயிலாக மாறி சேவை செய்கிறார். விடிந்ததும் மணமக்கள் திருவீதி உலா செல்கின்றனர். இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.
வைகாசி விசாகத்தின் போது பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து காவடி எடுத்து கால் நடையாக வந்து செலுத்துகின்றனர். பால்குட அபிஷேகம் போன்றவற்றை இறைவனுக்கு படைக்கின்றனர். தங்க தேர் ஊர்வலம், சந்தனா காப்பு, அபிஷேகங்கள் செய்து வணங்குகின்றனர். இதனால் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் நடைதிறக்கும் நேரம்:
திருக்கோயில் நடை அதிகாலை காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் அமைவிடம்:
இக்கோயில், தூத்துக்குடி மாவட்டதில், வங்களவிரிக்குட கடற்கரையில் திருச்செந்தூர் என்ற ஊரில் அமைந்துள்ள.
அருகில் உள்ள விமான நிலையம்:
தூத்துக்குடி விமான நிலையம் அருகில் உள்ளது.
அருகில் உள்ள இரயில் நிலையம்:
தூத்துக்குடி, திருநெல்வேலி இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்:
திரிச்செந்தூர் மத்திய பேருந்து நிலையம், தமிழக்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயில் முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் – 628205.
தொலை பேசி: 04639-242221






