அறுபடை வீடுகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கிய குறிப்பு
முருகப் பெருமான் வழிபாடு உலகம் முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில் இன்னும் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் முருகன் ஆலயங்கள் எங்கும் நிறைந்துள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்பதால் ஆலய வழிபாடு மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களின் பெரும்பகுதி முருகனை போற்றும் வகையில் அமைந்துள்ளது. திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தபுராணம் மற்றும் திருமுருகாற்றுப்படை போன்றவை மிக முக்கியமான நூல்களாகும். இவற்றில் திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு என்னும் இலக்கிய நுள்களில் முதல் நூலாக அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராகவும் பண்டியனின் தமிழ் சங்கத்தில் முதன்மை புலவராகவும் விளங்கிய நக்கீரன் என்னும் தமிழ் புலவரால் இயற்றப்பட்ட இலக்கியமே திருமுருகாற்றுப்படை ஆகும்.
ஆற்றுப்படை என்பது அரசரை போற்றி பாடல் பாடி பரிசு பெறும் பாணர்களை ஆற்றுப்படுத்தும் இலக்கியமாகும். முருக கடவுளின் அருள் பெற விரும்பும் அடியார்களை முருகப்பெருமானின் ஆறு திருத்தலங்களுக்கு செல்லுமாறு ஆற்றுப்டுதும் வகையில் திருமுருகாற்றுப்படை இயற்றப்படுள்ளது. திருமுருகாற்றுப்படை நூலில் அவ்வாறு நக்கீரர் குறிப்பிட்டுள்ள 6 திருத்தலங்களே அறுபடை வீடுகள் என்று போற்றப்படுகின்ற.

பக்தர்களின் வசதிக்காக ஆலயத்ரா, அறுபடை வீடுகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் வழங்க விரும்புகிறது. மேலும் தமிழால் வைதாருக்கும் அருள் புரிவான் முருகன். எனவே அறுபடை வீடு தரிசனம் செய்யும் அன்பர்கள் தவறாமல் அந்தந்த திருத்தலங்களில் இருந்து அந்த திருத்தலங்களுக்கான அருணகிரி நாதர் எழுதிய திருப்புகழை ஒருமுறையேனும் மனமுருகி படிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலும் அந்தந்த திருத்தலங்களின் திருப்புகழ் பாடல்களையும் இப்பதிவில் பதிவிடுவதில் மிகுந்த மகிழ்சி அடைகிறோம்.
1.திருப்பரங்குன்றம்:
அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றமாகும். பரம்பொருளான சிவபெருமானே குன்றமாக விளங்கும் மலை திருப்பரங்குன்றம். இந்த திருத்தலம் ஓர் குடவரை கோவிலாகும். சூரபத்மனை போரில் வென்று தேவர்கள் சிறை மீட்டு வெற்றி வீரனாக வந்த முருகப் பெருமானுக்கு தேவேந்திரன் தன் மகளான தேவசேனையை திருமணம் செய்து வைத்த திருத்தலம். மூலவருக்கு இல்லாமல் வேலுக்கே அபிஷேகம் நடைபெறும் தலம். கருவறையில் முருகன், சிவன், விஷ்ணு, துர்க்கை, விநாயகர் என ஐந்து தெய்வங்கள் அருள்பாலிக்கும் திருத்தலம். திருப்பரங்குன்றதின் சிறப்புகள் இன்னும் ஏராளம். அதை மற்றொரு தனி பதிவாக பதிவிட்டுள்ளோம் அன்பர்கள் அதையும் படித்து அருள் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். ஆலயத்தின் அருகே சமணர் படுகைகளும் உள்ளன.

திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டத்தில் மதிய பேருந்து நிலையதிலிருந்து வெறும் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. துருப்பரங்குன்றதிலேயே தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. எனவே பக்தர்கள் வந்துசெல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. மதுரையில் தரமான உணவு மற்றும் தங்கும் விடுதிகளும் உள்ளன. எனவே பக்தர்கள் தங்கி இருந்து திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள மற்ற சிறப்புவாய்ந்த திருத்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்யலாம்.
தரிசன நேரம்: காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
திருப்பரங்குன்றம் திருப்புகழ்:
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத் தொலைபேசி எண்கள்- 0452-2482248, 0452-2482249, 0452-2482648

2.திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாகும். மற்ற படைவீடுகள் போல் மலை மீது இல்லாமல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே திருத்தலமாகும். இது முருகன் சூரபத்மனுடன் போர் புரிய சென்றபோது தன் படை பர்வாரங்களோடு முகாமிட்டிருந்த உண்மையான படைவீடாகும். இங்கிருந்து கிரவுஞ்ச மலையை முருகன் அழித்ததாக சொல்லப்படுகிறது. முருகன் சிவனடியாராக காட்சிதரும் திருத்தலம். ஒரு மூலவருக்கு 4 உற்சவர்கள் உள்ள திருத்தலம். ராஜகோபுரம் மூலவருக்கு பின்புறம் உள்ள ஒரே திருத்தலம். இது ஒரு குரு தலமாகும். கண்ணாடியில் தெரியும் முருகனின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடத்தப்படும் ஒரே திருத்தலம். திருச்செந்தூர் திருத்தலத்தின் எண்ணிலடங்கா சிறப்புகளை நமது ஆலயத்ரா தளத்தில் விரிவான தகவல்களுடன் பதிவிட்டுள்ளோம். அன்பர்கள் அதையும் படித்து அருள் பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள. திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் எளிதாக வந்தடையலாம். கோவிலை சுற்றிலும் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான விடுதிகளும் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்துகொண்டு பக்தர்கள் தங்கி இறைவனை தரிசிக்கலாம்.
தரிசன நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் தொடர்ந்து திறந்திருக்கும். இடையில் நடை சாத்தப்படுவதில்லை என்பது சிறப்பு.

திருச்செந்தூர் திருப்புகழ்:
தண்டை அணி வெண்டையங் கிண் கிணி சதங்கையுந் தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டுநன் சந்தொடம் அணைந்து நின்று அன்புபோல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்துவேலும் கண்களு முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன்முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களங் கொண்டபோது பொன்கிரி யெனஞ் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும்
சிந்தைகூர கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே கொங்கை குறமங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே
திருச்செந்தூர் கோவில் அலுவலகத் தொலைபேசி எண்கள்- 04639-242221, 04639-242270, 04639-242271
3.பழநி :
முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழநி. பழநி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம். ஞானப் பழத்திற்காக தாய் தந்தையிடம் கோபித்துக்கொண்டு முருகப்பெருமான் மயில் மீது ஏறி வந்து அமர்ந்த தலம் பழநி. மூலவர் குழந்தை வடிவில் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார். அன்னை பார்வதி பழம் நீ என்று அன்போடு அழைத்தால் பழநி என்று பெயர் பெற்ற தலம். திருஆவினன்குடி என்று புராணங்களில் குறிப்பிடப்படும் தலம். தேவர்கள் பலரும் வந்து வழிபட்ட தலம். மலை மேல் 18 சித்தர்களில் ஒருவரான போகர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
பலர் மலை மீது உள்ள சந்நிதியே மூன்றாம் படைவீடு என்று கருதுகின்றனர். உண்மையில் திருஆவினன்குடி மலைக்கோவில் இரண்டும் சேர்ந்ததே படைவீடாகும். முதலில் அடிவார கோவிலில் தரிசனம் செய்த பிறகே மலை ஏற வேண்டும். சூரபத்மனின் குருவான இடும்பனுக்கு முதல் பூஜை நிகழ்ந்த பிறகே முருகனுக்கு பூசைகள் நடைபெறுகின்றன.
பழனி நவபாஷாண முருகன் மேல் இரவெல்லாம் சாற்றி வைக்கப்பட்ட சந்தனம் அதிகாலை நேரத்தில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தீராத நோய்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் கௌபீனா தீர்த்தம் மிகவும் விசேஷமானது. பழனி முருகன் ஆண்டி கோல தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ராஜயோகம் வழங்கி அருள்வான் என்பது ஐதீகம். நேர்த்திகடனாக இத்தலத்தில் முடி காணிக்கை செலுத்துதல் விசேஷம். இதனை பெருமை வாய்ந்த பழனி முருகன் திருக்கோவிலின் அளவிட முடியாத சிறப்புகளை விரிவான தனிப் பதிவாக வழங்கியுள்ளோம். அன்பர்கள் அந்த பதிவையும் படித்து அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும். மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளதால் தமிழகம் முழுவதிலுமிருந்து சுலபமாக பக்தர்கள் கோவிலை வந்தடையலாம். திருக்கோவிலை சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகளும் சத்திரங்களும் அமைந்துள்ளன. கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
தரிசன நேரம்: காலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

பழநி திருப்புகழ்:
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த பெருமாளே.
பழநி கோவில் அலுவலகத் தொலைபேசி எண்கள்- 04545-241293, 04545-241417, 04545-242236, 04545-242467
4.சுவாமி மலை :
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இத்திருத்தலம் புராணங்களில் திருவேரகம் என்று அழைக்கப்படுகிறது. இது காவிரி வடகரைக் கோவில்களில் ஒன்றாகும். மூலவர் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவே கல்வியில் சிறந்து விளங்க, ஆன்மீக ஞானம் பெற இத்தல இறைவனை வழிபடுகின்றனர். பழனியைப் போலவே இந்த திருத்தலமும் பின்னாளில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த கோவில் அமைந்துள்ள குன்று இயற்கையான மலை அல்ல. கருங்கற்களை குவித்து செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றாகும்.
தமிழ் வருடங்கள் 60 ஐக் குறிக்கும் வகையில் 60 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. புராணங்களில் குறிப்பிட்டபடி தன் தந்தையான வேத நாயகன் சிவபெருமானுக்கே ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை முருகப்பெருமான் குருவாக இருந்து உபதேசித்த திருத்தலமான திருவேரகம் திருக்கோவில் சுவாமி மலை ஆலயத்திலிருந்து சற்று தொலைவில் ஏரகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தை ஆதித் திருவேரகம் என்று அழைக்கின்றனர். அறுபடை வீடு தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதித் திருவேரகத்தை தரிசித்த பிறகு சுவாமி மலை முருகனை தரிசிக்கலாம்.
சுவாமி மலை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கும்பகோணத்தில் இருந்து வெறும் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே தாராளமான பேருந்து வசதிகள் உள்ளன. கும்பகோணம் ரயில் நிலையமும் அருகில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் எளிதில் வந்தடையலாம். கோவில் நகரமான கும்பகோணத்தில் ஏராளமான திருத்தலங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி இருந்து முக்கியமான கோவில்களை தரிசித்து செல்வது வழக்கம். கும்பகோணத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. சுவாமி மலை சந்நிதியிலேயே கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியும் கோவில் வாசலில் சில சத்திரங்களும் உள்ளன. சுவாமி திருத்தலத்தின் விரிவான பதிவு நமது ஆலயத்ரா தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆன்மீக அன்பர்கள் அந்த பதிவையும் படித்து அருள் பெற வேண்டுகிறோம்.
தரிசன நேரம்: காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. மலை 4.00 மணிமுதல் 9:00 மணி வரை.
சுவாமி மலை திருப்புகழ்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே.
சுவாமி மலை கோவில் அலுவலகத் தொலைபேசி எண்கள்- +91 435 245 4421, 0435-2454421

5.திருத்தணிகை:
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகையாகும். சொரப்தமனை போரில் வெற்றி பெற்ற பிறகு முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. மேலும் வள்ளி அன்னையிடம் கிழவனாக வந்து திருவிளையாடல் செய்து திருமணம் செய்து ஆட்கொண்டது இந்த திருத்தலத்தில் தான். திருமணத் தடைகள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். திருத்தணி திருப்புகழை தினமும் பாராயணம் செய்து வழிபட்டாலே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
வேல்மாறல் மஹா மந்திரம் இத்தலத்தை முதன்மையாக கொண்டு இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. மற்றும் போதுமான பேருந்து வசதிகள் அமைந்துள்ளது. அரக்கோணத்தில் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. இந்த திருத்தலத்தை பற்றியும் நமது வலைத்தளத்தின் விரிவான பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அன்பர்கள் அதையும் படித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருத்தணிகை திருப்புகழ்:
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச் சிரிப்பவர் தமக்கும்
பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும்
பொருப்பையு மிடிக்கும் நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய் தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
திருத்தணிகை தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை.
கோவில் அலுவலகத் தொலைபேசி எண்- +91 44 2788 5247
6.பழமுதிர்சோலை:
முருகப்பெருமானின் ஆறாம் படை வீடு பழமுதிர்சோலை. இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் அவ்வையாருக்கு நாவல் பழம் கொடுத்து “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு ஞானம் வழங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. மூலவர் வள்ளி தவணை சமேதராக சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார். ஆணவம் அகன்று ஞானம் பெறவும் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இந்த கோவிலின் அருகே அமைந்துள்ள நூபுர கங்கை என்ற வற்றாத அருவி மிகவும் சிறப்புவாய்ந்த தீர்த்தமாகும். இந்த தீர்த்ததில் நீராடுவது மிகவும் சிறப்பு. அதற்கு தகுந்தவாறு ஆடைகளை எடுத்துச் செல்வது நல்லது.
கோவிலின் அருகே அவைக்கு முருகன் பழம் உதிர்த்த நாவல் மரம் இன்றும் உள்ளது. இந்த கோவில் பழமுதிர்ச்சோலை மலை உச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்துள்ளத. மதுரை மீனாட்சியின் சகோதரனான கள்ளழகர் ஆலயத்தில் தாண்டி மலை மேல் 3 கிமீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு அடிவாரம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலை உச்சிக்கு செல்ல தனியார் வாகனங்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். குரங்குகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளையும் உடைமைகளையும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் அருகே அமைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல்ல வசதியாக உள்ளது. கள்ளழகர் ஆலயத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தவிர ஒருசில தனியார் விடுதிகளும் கோவில் வளாகத்தின் வெளியில் உள்ளன. உணவு விடுதிக்கு செல்ல கோவில் வளாகத்திற்கு வெளியே செல்ல வேண்டும். மேலும் இந்த கோயில் குறித்து விரிவான தகவல்களை தனி பதிவாக வெளியிட்டுள்ளோம் அன்பர்கள் அதையும் படித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பழமுதிர்சோலை திருப்புகழ்:
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.
பழமுதிர்சோலை கோவில் அலுவலகத் தொலைபேசி எண். 0452 691 5061 அல்லது +91 452 691 5061
அறுபடை வீடு புனித யாத்திரை செல்ல விரும்பும் ராசிக்காரர்கள் சரியாக திட்டமிட்டு தரிசன நேரத்தை தவறாமல் சரிபார்த்து சென்று தரிசனம் செய்து, வேண்டியதெல்லாம் வாரி வழங்கும் வள்ளல் முருகப் பெருமான் திருவருள் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.






